அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்-ஆசிரியர்களுக்கு, கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்

Update: 2022-12-14 18:45 GMT

தர்மபுரி:

அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு, கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜகோபால், மான்விழி, ரேணுகோபால், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான முறையில் பாடங்களை கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்வி உதவித்தொகைகள் மாணவர்களுக்கு சென்றடைவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மாணவ-மாணவிகள் பிளஸ்-2 முடித்த பிறகு உயர்கல்வி கற்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

மிகுந்த கவனம்

அரசு பள்ளிகளின் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மை, மேற்கூரை, சுற்றுச்சுவர் பராமரிப்பு, மின் கசிவு இன்மை ஆகியவற்றில் தலைமை ஆசிரியர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் திறனறி தேர்வுகளை சிறப்பாக எழுதவும், அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெறவும் ஆசிரியர்கள் உரிய பயிற்சியை வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சாந்தி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்