இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.;
இளையான்குடி,
மின் இணைப்பு கொடுக்காமலேயே மின் கட்டணம் அதிகாரிகள் செலுத்த கூறுவதாக ஒன்றிய குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.ஒன்றிய குழு கூட்டம்
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய சேர்மன் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊர்காவலன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:- கவுன்சிலர் முருகானந்தம்:- கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரங்கள் எளிதில் கிடைக்கவும், யூரியாவுக்கு நிகரான நாணோ-லிக்யூட் உரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப உரங்கள், இடுபொருட்கள் கிடைக்கவும் வேளாண்மை துறை அதிகாரிகள் உதவ வேண்டும். முருகன்:- பெருமச்சேரி கிராமத்தில் கண்மாய்க்குள் செல்லும் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருப்பதால் உயிர்ப்பலி ஏற்படும் முன்பு மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் கட்டணம்
சண்முகம்:- நீர் தேக்க தொட்டிக்கு மோட்டார் இணைப்பு கேட்கப்பட்டு இதுவரை மின்இணைப்பு கொடுக்கவில்லை ஆனால் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக ஆவணங்களில் பதிவு செய்து அதற்கான மின் கட்டணமும் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். இது போன்ற முரண்பட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் எப்போது செயல்படும்?.
கீர்த்தனா கனகராஜா:- திருவேங்கடத்தில் குடியிருப்பு பகுதியில் பேவர் பிளாக் சாலை, தொண்டையூர் கிராமத்தில் குளியல் தொட்டி, பிடாரனேந்தல் கிராமத்தில் நாடக மேடை அமைக்க வேண்டும்.
கண்டன தீர்மானம்
செழியன், சீமைச்சாமி, மலையரசி ஆகியோர் மின்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன குரல் எழுப்பினர். மேலும், மின்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். கூட்டத்திற்கு வராமலும், கூட்டத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் தராமலும் பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயங்களில் மெத்தன போக்குடன் நடந்து கொள்வதால் கண்டன தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.
ஆணையாளர் ஊர்க்காவலன்: உறுப்பினர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் வேளாண் தொடக்க வங்கி தலைவர்கள் தமிழரசன், பாரதிராஜன், ராஜா, கனகராஜா, சாத்தையா, துரை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார்.