பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டர்களை சந்திக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சவால்
பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டர்களை சந்திக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.;
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில், மதுரையைச் சேர்ந்த ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான். எம்.ஜி.ஆர்.ஆரால் உருவாக்கப்பட்ட தொண்டர்கள் இயக்கமாகவும் செயல்பட்டு வரும் இந்த கட்சியை, ஜெயலலிதா தனது தீவிர முயற்சியால் மாபெரும் எக்கு கோட்டையாக மாற்றினார். கட்சியின் பொருளாளராக 4 மாதங்கள் தாக்கு பிடிப்பது கடினம் என்று கூறிய நிலையில், நான் கடந்த 13 ஆண்டுகளாக கட்சி பொருளாளராக பணியாற்றியுள்ளேன்.
கடந்த மாதம் 23-ந்தேதி சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக சென்றபோது, எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கும் பெயரில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி என்னை பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இருக்க திட்டமிட்டனர். ஆனால் போலீசார் உதவியுடன் நான் பொதுக்குழுவில் கலந்துகொண்டேன்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது நான் உள்பட 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு, 4 மாவட்டங்களுக்கு ஒருவரை நியமித்து அங்கு கட்சியை வளர்த்து இளைஞர்களை உருவாக்குவோம் என்று கூறினேன். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை.
நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். அதேபோன்று எடப்பாடி பழனிசாமியும் தனது பதவியை ராஜினாமா செய்யட்டும். அதன்பிறகு 2 பேரும் தொண்டர்களை சந்திக்கலாம். இதற்கு அவர் தயாரா?. அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.