குமாரபாளையம், மோகனூர் பகுதி வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குைறதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

குமாரபாளையம், மோகனூர் பகுதி வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-08-26 16:49 GMT

குமாரபாளையம், மோகனூர் பகுதி வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குமாரபாளையம் வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால் பகுதிகளில் திருமணிமுத்தாற்றின் சாயக்கழிவு நீர் கலப்பதால் வெற்றிலை பயிர்கள் கருகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகராட்சியில் இருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்னி விதை நெல் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கபிலர்மலை பகுதியில் விவசாய நிலங்களில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உழவர் சந்தைகள்

ராசிபுரம் மற்றும் நாமக்கல் உழவர் சந்தைகளின் நுழைவுவாயிலில் வியாபாரிகள் காய்கறிகள் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டது. கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

இதனிடையே வடகரையாத்தூர் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தைவேல் என்பவர், அவரது விவசாய நிலத்தை அவரது பெயரில் பதிவு செய்து சிட்டா வழங்க கோரி கருப்பு துணியால் கண்களை மூடிக்கொண்டு சட்டையின்றி அரை நிர்வாணமாக வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார்.

பரபரப்பு

அப்போது 2010-ம் ஆண்டு அவர் வாங்கிய விவசாய நிலத்தின் ஒரு பகுதி, வேறு நபர் பெயரில் இருப்பதாகவும், அதை சரி செய்து தனது பெயரில் விவசாய நிலத்துக்கு சிட்டா கேட்டு கடந்த 6 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், கருப்பு துணியால் கண்களை மூடிக்கொண்டு மனு அளிக்க வந்ததாக கூறினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொ) பாஸ்கர், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்