மாசி மண்டல திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர்

மாசி மண்டல திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் எழுந்தருளி காட்சி அளித்தனர்.;

Update:2023-03-07 02:14 IST


மாசி மண்டல திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

மாசி மண்டல திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை.

அதில் மாசி திருவிழா தான் சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த திருவிழாவில் விநாயகர், முருகன், முதல் மூலவர், சுந்தரேசுவரர் என ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக திருவிழா நடைபெறும்.

இவ்வளவு சிறப்புவாய்ந்த மாசி மண்டல திருவிழா கடந்த மாதம் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தனர்.

இந்த நிலையில் மாசி மகத்தையொட்டி மாசி தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து சிம்மக்கல் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளினர். அங்கு படித்துறையில் தீர்த்தவாரி விழா நடந்து, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி அங்கிருந்து கிளம்பி கோவிலை வந்தடைந்தனர்.

பக்தர் வழங்கிய தங்க கிரீடம்

இந்தநிலையில் மலேசியாவை சேர்ந்த பக்தர் ஒருவர் வீதி உலா வரும் உற்சவர் மீனாட்சி, சுந்தரேசுவரர், பிரியாவிடை மீனாட்சி ஆகியோருக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை வழங்கினார். அந்த கிரீடத்திற்கு அம்மன் மற்றும் சுவாமி சன்னதியில் வைத்து நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. பின்னர் மாசி மகமான நேற்று மாசி தீர்த்தவாரி விழாவிற்கு சென்ற அம்மன், சுவாமிக்கு அந்த தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்