மருத்துவகுணம் கொண்ட வரி மட்டி சீசன் தொடங்கியது

மருத்துவகுணம் கொண்ட வரி மட்டி சீசன் தொடங்கியது;

Update: 2023-05-27 20:06 GMT

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம் கொண்ட வரி மட்டி சீசன் தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவ குணம் கொண்ட வரிமட்டி

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட வரி மட்டி வரத் துவங்கியுள்ளது. இந்த மட்டி நத்தை இனத்தை சேர்ந்த மட்டி இனமாகிய இவற்றில் வரி மட்டி, வழி மட்டி, வழுக்கு மட்டிகள் என பலவகைகள் உண்டு. இது பெரும்பாலும் சேறும் மணல் சார்ந்த பகுதிகளில் கிடைக்கிறது. தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அலையாத்தி காடுகள் உள்ள பகுதி என்பதாலும் மேலும் சேற்றுப்பகுதி என்பதாலும் இந்த பகுதிகளில் வரி மட்டி உற்பத்தியாகிறது. இது மருத்துவகுணம் கொண்டது மூலம் நீண்ட நாட்களாக உள்ள இடுப்பு வலி, மூலச்சூடு, பெண்களுக்கு வரும் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

வரி மட்டியின் ஓடு கிலோ ரூ.50

இதன் ஓடுகள் அழகு சாதனப்பொருட்கள், வர்ணம் பூச்சுகள் தயாரிக்க பயன்படுகிறது. இதன் ஓடுகளை தரம்பிரித்து ராமேஸ்வரம், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. வரிமட்டியின் ஓடு கிலோ ரூ.50 வரை விற்கப்படுகிறது. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் சேறும், மணல் உள்ளதாலும் மட்டி பிடிக்கும் மீனவர்கள் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி வரி மட்டி பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், மட்டி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்திலிருந்து சீசன் தொடங்கும். தற்போது கடல் சீற்றம் இல்லாமல் இருப்பதால் ஒரு சில மீனவர்கள் மட்டி பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரி மட்டி மார்க்கெட்டுக்கு 5 கிலோ முதல் 7 கிலோ வரை தான் விற்பனைக்கு வருகிறது.

பிரியாணி சுவையாக இருக்கும்

மட்டி சீசன் நாட்களில் கிலோ ரூ.80-க்கு விற்ற மட்டி தற்போது ரூ.100-க்கு விற்பனையாகிறது. கடலில் சீற்றம் இல்லாமல் இருந்தால் ஜூன் மாதம் வரை கிடைக்கும். இது மருத்துவ குணம் கொண்டது என்பதால் மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடலோர கிராமப் பகுதிகளில் வசிக்கும் மீனவ பெண்கள் தினந்தோறும் காலை நேரங்களில் மட்டிகளை வாங்கி அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்து வருவார்கள். பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி மட்டியின் சதைப்பகுதியை வறுத்தும், அவியல் செய்தும் சாப்பிடுகின்றனர். வரிமட்டியைக்கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி சுவையாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் வரி மட்டியை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்