ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல மருத்துவ பரிசோதனை
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சேந்தமங்கலம்
கொல்லிமலை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலையை சுற்றி பார்க்க கடந்த 20-ந் தேதி சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த நிதிஷ் காந்த் என்பவர் வந்தார். மலைப்பகுதியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காண அந்த பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் இறங்கி கொண்டிருந்தார்.
அப்போது சுமார் 500 படிக்கட்டுகளை கடந்த போது நிதிஷ்காந்த் திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். அதையடுத்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தவிர்க்கும் பொருட்டு கொல்லிமலை வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உடல் பரிசோதனை
அதன்படி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுவாயில் பகுதியில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் உடல்நிலை குறைவால் வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுறுத்தலின் பேரில் கொல்லிமலை வனத்துறையினர் கடைபிடித்து வருகின்றனர். சுமார் 300 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து விழும் அந்த நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.