சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல்லில் சிறப்பு மருத்துவ முகாமை ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமரன், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக நீரழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்பட பல்வேறு நோய்களை சரி செய்யும் செடிகள் மற்றும் மூலிகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த கண்காட்சியை ராமலிங்கம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து முகாமில் சர்க்கரை நோய், இருதய நோய், ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு, மருந்துகளும் வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்து கொண்டனர்.