சிறப்பு மருத்துவ முகாம்
இளையான்குடி அருகே உள்ள நாகமுகுந்தன்குடி கிராம ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள நாகமுகுந்தன்குடி கிராம ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முகாமில் காசநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குழந்தைகள் மருத்துவம், பொதுமக்களுக்கு பொது மருத்துவம் ஆகியவற்றை வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். உடல் உள் உறுப்புகளை பாதுகாக்க எக்ஸ்ரே மூலம் ஆய்வு செய்து 18-க்கும் மேற்பட்ட நோயாளிகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட நோயாளிகள் தாயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம், சிவகங்கை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு பரிந்துரை செய்து தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காசநோய் இருப்பதை உறுதி செய்த நோயாளிகளுக்கு தொடர்ந்து பரிசோதனைகள், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுவதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார். சிறப்பு மருத்துவ முகாமில் 160-க்கும் மேற்பட்ட பயனாளிகளை தேர்வு செய்து தக்க ஆலோசனை வழங்கி தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை நாகமுகுந்தன்குடி கிராம ஊராட்சி அலுவலர்களும், மருத்துவத்துறையினரும் செய்திருந்தனர். ஊராட்சி செயலாளர் முத்து பாண்டியன், மக்கள் நல பணியாளர் கலைவாணி ஆகியோர் நன்றி கூறினர்.