கரூர் உழவர்சந்தையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளால் சுமார் 21 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக கரூர் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாயிகள் மற்றும் அவர்களின் விளைபொருட்களின் தூய்மை, தரம் மற்றும் சுகாதாரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் உழவர் சந்தை விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் சான்று பெற்று வழங்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக உழவர்சந்தை விவசாயிகளுக்கு மருத்துவ தகுதி சான்று வழங்கிட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இம்முகாமில் கண், தோல் என அனைத்து விதமான பரிசோதனைகளும், தனிப்பட்ட மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியும் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டது. கரூர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வினோதா, உதவி வேளாண்மை அலுவலர்கள் பாபு, கலைச்செல்வம், வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் சத்தியேந்திரன் மற்றும் மருத்துவ குழுவினரால் இம்முகாம் நடத்தப்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட கரூர் உழவர் சந்தை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.