புதுக்கோட்டையில் இறைச்சி விற்பனை சரிவு

கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் விரதம் எதிரொலியால் புதுக்கோட்டையில் இறைச்சி விற்பனை சற்று சரிவடைந்துள்ளது.

Update: 2022-11-20 18:03 GMT

பக்தர்கள் விரதம்

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் ஆன்மிகம் நிறைந்த மாதமாகும். அய்யப்ப பக்தர்கள் இந்த மாதத்தில் 1-ந் தேதியில் இருந்து மாலை அணிந்து விரதம் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வது உண்டு. அய்யப்ப பக்தர்கள் விரதத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது உண்டு.

இதேபோல விரதம் இருப்பவர்களின் வீடுகளிலும் சுத்தம் கடைப்பிடிக்கப்படும். அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பார்கள். இதேபோல முருக பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு விரதம் இருப்பது உண்டு. இந்த நிலையில் இதுபோன்ற விரதத்தின் காரணமாக வீடுகளில் பலர் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டனர். இதனால் புதுக்கோட்டையில் இறைச்சி விற்பனை சற்று சரிவடைந்துள்ளது.

இறைச்சி கடைகள்

புதுக்கோட்டையில் மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி விற்பனை ஞாயிற்றுக்கிழமைகளில் அமோகமாக நடைபெறும். இறைச்சி கடைகளில் காலை முதல் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டத்தை விட சற்று குறைந்திருந்தது.

ஆனால் விலைகளில் குறைவு எதுவும் ஏற்படவில்லை. மீன்களின் விலையும் சராசரியாக தான் இருந்தது. புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பிற மாவட்டங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஓட்டல்களிலும் அசைவ உணவு விற்பனை சற்று குறைந்து, சைவ உணவு விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல காய்கறி கடைகளிலும், உழவர் சந்தையிலும் காய்கறி விற்பனை அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்