மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அடையாறு ஆற்றின் அகலத்தை அதிகப்படுத்த நடவடிக்கை - டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்
குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அடையாறு ஆற்றின் அகலத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.;
சென்னை புறநகர் பகுதிகளில் மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பொதுபணித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். இதில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது:-
ஒவ்வொரு மழை காலத்திலும் முடிச்சூர், வரதராஜபுரம், அஷ்டலட்சுமி நகர், டி.டி.கே.நகர், இரும்புலியூர், அருள் நகர், கிருஷ்ணாநகர், சி.டி.ஓ. காலனி, செம்பாக்கம், திருமலைநகர், மாடம்பாக்கம், டெல்லஸ் அவென்யூ போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி அங்குள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திட்டங்கள் தீட்டப்பட்டு அதனை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 30 சதவீத பணிகள் முடிக்கப்படவில்லை.
தொடர் மழை காலத்தில் ஒரு நொடியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. ஆனால் தற்போது நீர்வழி பாதையில் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் வெளியேறும் நிலையில் உள்ளது. எனவே கூடுதலாக 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் ஒரத்தூர், ஆதனூர், நந்திவரம், சோமங்கலம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் அடையாறு ஆற்றை நோக்கி வரும்போது முடிச்சூர், வரதராஜபுரம், கிருஷ்ணாநகர் பகுதிகளில் இருந்து வெளியேற வழியில்லாததால் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
எனவே குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அடையாறு ஆற்றின் அகலத்தை 20 மீட்டர் அகலப்படுத்த வேண்டும். இதற்கான முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள் ஒற்றுமையாக செயல்பட்டு அடையாறு ஆற்றின் அகலத்தை அதிகப்படுத்த தேவையான நிலத்தை மீட்பது, அதற்கு மாற்று இடம் தருவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.