தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை

தென்மேற்கு பருவமழை காலங்களில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது;

Update: 2022-07-12 16:34 GMT

பொள்ளாச்சி

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு கூறுகையில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி அதிகமாக நிதியை ஒதுக்கி வருகிறார். இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்தில் அறிவித்த கோவை-தூத்துக்குடி துறைமுகம் வரையிலான சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

பல்வேறு கோரிக்கைகள் முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. தொழில் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒட்டன்சத்திரம் பிரச்சினை தொடர்பான விவசாயிகளின் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

தென்மேற்கு பருவமழை காலங்களில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்