தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி உயிரிழந்தார்.;
ஈரோடு,
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24-ந்தேதி கனேசமூர்த்தி திடீரென மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலை 5.05 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.