திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அரசின் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு திருப்பூர் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும்.
பொதுமக்களுக்கு எந்தவித தங்குதடையின்றி அரசின் திட்டங்கள் சென்றுசேர அனைத்து துறை அலுவலர்களும் சரியான முறையில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், ஆர்.டி.ஓ.க்கள் குமரேசன் (தாராபுரம்), ஜஸ்வந்த் கண்ணன் (உடுமலை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.