காஞ்சீபுரம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா
காஞ்சீபுரம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது.
மயான கொள்ளை திருவிழா
பெரிய காஞ்சீபுரம் கம்மாள தெரு மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.
அந்தவகையில் இந்த ஆண்டும் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அங்காளபரமேஸ்வரி அம்மன் 24 கைகளை கொண்டு எலுமிச்சை பழம் மாலை, நறுமண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, ராட்சத மாலைகளுடன் பிரமாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவர் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்கடை சத்திரம் வழியாக நான்கு ராஜவீதி வழியாக வலம் வந்து, பழைய ரெயில்வே சாலையில் உள்ள இடுகாட்டில் நிறைவு பெற்றது.
நேர்த்திக்கடன்
அங்காளம்மன் மயானத்தை நோக்கி சென்றபோது ஏராளமான பக்தர்கள் கோழிகளை கடித்தவாறு அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது காய்கள், பழ வகைகள், மலர்கள், நாணயம், ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை அம்மன் மீது வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் எலுமிச்சை குத்தியும், 30 அடி நீள வேலை அலகு குத்தி பேண்டு வாத்தியங்கள் முழங்க தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தெய்வங்களின் உருவங்களை போன்று வேடமணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
உத்திரமேரூர்
உத்திரமேரூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. அம்மன் புஷ்பக விமான பல்லக்கில் மேளதாளங்கள் முழங்க மங்களவாத்தியங்கள், வாண வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை முடிந்தபின் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். எலுமிச்சை பழங்களை உடலில் குத்திக்கொண்டும் முதுகில் அலகு குத்தி கார், வேன் டிராக்டர்கள், உரல்கள் உள்ளிட்டவற்றை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூர் பரமேஸ்வரன் நகர்பகுதியில் உள்ள புகழ் பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கி அம்மனுக்கு மாலை அணிவித்தும் பல்வேறு வகையான வேண்டுதல்களை நிறைவேற்றினர். பின்னர் காளியம்மன் வேடமிட்டு ஊர்வலமாகச் சென்று அங்குள்ள மயானத்தில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.