தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின ஊர்வலம்

வேலூரில் ஏ.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-05-01 17:16 GMT

மே தின ஊர்வலம்

உழைக்கும் வர்க்கத்தை கொண்டாடும் தினமான மே தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட ஜனநாயக பொதுதொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.சி.சி.டி.யு.) சார்பில் மே தின ஊர்வலம் நேஷனல் சர்க்கிள் அருகே நேற்று நடந்தது. ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சுகுந்தன், இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சரோஜா, வேலூர் கலைஞர் கண் மருத்துவமனை டாக்டர் முகமதுசயி, ஏ.ஐ.சி.சி.டி.யு. ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சிம்புதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பாலாறு பாதுகாப்பு இயக்க நிர்வாகி பரசுராமன், சட்ட ஆலோசகர் சந்திரசேகர், தலைமைக்குழு உறுப்பினர் குப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஊர்வலம் நேஷனல் சிக்னல் பகுதியில் இருந்து தொடங்கி காட்பாடி சாலை, மக்கான் சிக்னல், அண்ணாசாலை வழியாக சென்று வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு நிறைவடைந்தது.

பணி நிரந்தரம்

இதில் ஜனநாயக பொதுதொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழ்நாடு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைகளில் 90 சதவீதம் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நலவாரிய பணப்பயன்களை உயர்த்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

பல்வேறு கோரிக்கைகள்

வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மே தின ஊர்வலம் வேலூர் மக்கான் சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணி, கோவிந்தராஜ், சுப்பிரமணியன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ஜி.லதா ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் அண்ணாசாலை, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையம் வழியாக சென்று அண்ணாகலையரங்கம் அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மத்திய அரசு ரெயில்வே, பி.எஸ்.என்.எல்., வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை முற்றிலும் கைவிட வேண்டும், தமிழ்நாடு அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் பல ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணிபுரிபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

இதேபோன்று வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு., வேலூர் நகர ஆட்டோ தொழிற்சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தினத்தையொட்டி ஊர்வலம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்