முதுமலையில் மஞ்சப்பை வழங்கும் எந்திரம்

முதுமலை தெப்பக்காட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மஞ்சப்பை வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.10 செலுத்தி மஞ்சப்பைகளை சுற்றுலா பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

Update: 2023-10-20 19:45 GMT

முதுமலை தெப்பக்காட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மஞ்சப்பை வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.10 செலுத்தி மஞ்சப்பைகளை சுற்றுலா பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

பிளாஸ்டிக் பயன்பாடு

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால் குளுகுளு சீசனை அனுபவிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கேரளா-கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும்போது பிளாஸ்டிக் பைகளை அதிகமாக கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தி விட்டு மலை பள்ளத்தாக்குகள் மற்றும் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதோடு, பிளாஸ்டிக்கை உன்னும் வனவிலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்துத்துறை அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு நடத்தி சுற்றுலா பயணிகளிடம் இருந்து பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

துணிப்பை வழங்கும் எந்திரம்

இந்தநிலையில் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பைகளை வழங்கும் தானியங்கி எந்திரம் தெப்பக்காடு வரவேற்பு அலுவலகத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.

இதன் பயன்பாட்டை முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எந்திரத்தில் ரூ.10 பணம் செலுத்தி மஞ்சப்பை வழங்கும் எந்திரம் மூலம் துணிப்பைகளை பெற்று செல்கின்றனர். நிகழ்ச்சியில் வனச்சரகர்கள் சதாம் உசேன், மனோஜ் உள்பட சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சமவெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்குவதால், அவர்கள் வசிக்கும் இடங்களிலும் நெகிழி பயன்பாட்டை குறைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்