துணை முதல் அமைச்சர் விவகாரம்...துண்டு போட்டு வைக்கிறீங்களா? கலகலப்பாக பேசிய உதயநிதி

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராவர் என்பதுமே தான் இளைஞர் அணியினரின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.;

Update:2024-07-20 20:21 IST

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க. இளைஞரணி 45-வது ஆண்டு தொடக்க விழா இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விழாவில், தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைத்தள பக்கங்களையும், அதற்கான பயிற்சியையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2, 3 இடங்களையாவது பிடித்துவிட வேண்டும் என்று 6 முறை பிரசாரத்திற்கு வந்தார். நான் அப்போதே சொன்னேன் 6 முறை அல்ல ஆயிரம் முறை வந்தாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எங்கள் தலைவரையும், சமூகநீதியையும் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொன்னேன். அதை நிரூபித்து 40-க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று இங்கு பலர் முன்மொழிந்தீர்கள். பத்திரிகைகளில் வந்த கிசு கிசுக்கள், வதந்திகளை படித்துவிட்டு வந்து இது நடக்கப்போகிறதோ அப்படியானால் நாம் ஒரு துண்டு போட்டு வைத்துவிடுவோம் என்ற அடிப்படையில் பேசியிருக்கிறீர்கள். துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்ட போது எல்லா அமைச்சர்களும் முதல்-அமைச்சருக்கு துணையாகத் தான் இருப்போம் என்று கூறினேன். எவ்வளவு பெரிய பொறுப்புக்கு வந்தாலும் என்னுடைய மனதுக்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்றால் அது தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பு தான். எனவே, எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறந்துவிட மாட்டேன்" இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்