ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கி கொத்தனார் பலி

நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கி கொத்தனார் பலியானார்.;

Update: 2022-06-27 17:02 GMT

செம்பட்டி:

நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கி கொத்தனார் பலியானார்.

கொத்தனார்

திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் லியோன் தர்மராஜ் (வயது 30). கொத்தனார். நேற்று இவர், சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 4 பேருடன் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்கு குளிப்பதற்காக சென்றார்.

பின்னர் அணையில் இறங்கிய லியோன் தர்மராஜ், நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் அடித்து விளையாடியபடி குளியல் போட்டார். சிறிது நேரத்தில் நண்பர்களை விட்டு விலகிய அவர், நீச்சல் அடித்தபடியே ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய கால்கள் அணைக்குள் இருந்த சேற்றில் சிக்கின.

நீரில் மூழ்கி பலி

இதை கவனிக்காமல் அவருடைய நண்பர்கள் கரைக்கு திரும்பினர். தண்ணீரில் மூழ்கிய லியோன் தர்மராஜ் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி இறந்தார். இதற்கிடையே நண்பன் திரும்ப வராததையறிந்து பதற்றமடைந்த 4 பேரும் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திண்டுக்கல், ஆத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அணையில் மூழ்கிய லியோன் தர்மராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவருடைய உடலை மீட்டு கரைப்பகுதிக்கு தீயணைப்பு படைவீரர்கள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த செம்பட்டி போலீசார், லியோன் தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த லியோன் தர்மராஜூக்கு ஜாய் வின்சி (25) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அணையில் மூழ்கி கொத்தனார் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்