முககவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் முககவசம் அணியவில்லை என்றால் ஆஸ்பத்திரிக்குள் அனுமதி இல்லை என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-03-31 18:46 GMT

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் முககவசம் அணியவில்லை என்றால் ஆஸ்பத்திரிக்குள் அனுமதி இல்லை என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுபோல், காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்கிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் இன்று முதல் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த அறிவிப்பை பின்பற்றுவதற்கான முன்எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஆஸ்பத்திரி வளாகத்தில் ஒலி பெருக்கிகள் மூலம் முககவசம் அணிவது குறித்தும், அரசு அறிவித்துள்ளது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தி உள்ளது. அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அரசின் உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது.

இன்று முதல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள், ஆஸ்பத்திரியில் தங்கி உள்ளவர்களை பார்க்க வருபவர்கள் என அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறையை சரிவர கடைபிடிப்பதற்கு, ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், முககவசம் குறித்து ஆய்வு செய்வார்கள். அதன்பின்னரே ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தப்பிக்க முடியும்

மதுரையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அதாவது நேற்று முன்தினம் மதுரையில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்களும் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தாலும், அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முககவசம் அணிவது சிறந்ததுதான். பொதுவாக முககவசம் அணிவது என்பது எப்போதும் நல்ல விஷயம்தான். முககவசம் அணிவதன் மூலம் கொரோனா மட்டுமின்றி எந்தவித நோய் பாதிப்பில் இருந்தும் தப்பித்து கொள்ள முடியும்.

ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் நேரம் மட்டுமின்றி கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்ததுபோல் பொது இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணிவதன் மூலம் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். மருத்துவத்துறையினருடன், பொது மக்களும் முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்