மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
தேசூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது.
சேத்துப்பட்டு
தேசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது.
தெள்ளார் ஒன்றிய வட்டார வள மையம் சார்பில் வட்டார கல்வி அலுவலர்கள் ரங்கநாதன், தரணி, தெள்ளார் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தே.ஜெயசீலன் ஆகியோர் தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளித்ததை நேரில் பார்வையிட்டனர்.
இதுகுறித்து வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசிலன் கூறுகையில், குண்ணகம்பூண்டி, தேசூர், சி.ம.புதூர், பொன்னூர், கடம்பை, மழையூர், நல்லூர், தெள்ளார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என 33 பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்காப்பு பயிற்சியாளர்கள், சிவக்குமார், மணிகண்டன், சரவணன், இன்னொரு மணிகண்டன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.
இந்த பயிற்சி அளிக்கப்படுவதை ஆசிரியர் பயிற்றுனர்கள் மரிய பிரகாசம், கற்பகவல்லி, தினேஷ்பாபு, தமிழ்நேசன், பிரபு, பாலாஜி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர் என்றார்.