தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.17 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.17 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
தர்மபுரி உழவர் சந்தையில் ரூ.17 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது.
45 டன் காய்கறிகள்
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டு பல்வேறு காய்கறிகளுடன் உணவு சமைப்பது வழக்கம் இருந்து வருகிறது. இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறும். அதன்படி தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வர தொடங்கினர். சந்தையில் 7 டன் மலைக்காய்கறிகள் மற்றும் 38 டன் நாட்டு காய்கறிகள் என மொத்தம் 45 டன் காய்கறிகள், 2,266 கிலோ பழங்கள் விற்பனையானது. மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது. இது மட்டும் இல்லாமல் வாழை இலை மற்றும் பூக்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
போக்குவரத்து நெரிசல்
தர்மபுரி உழவர் சந்தைக்கு நேற்று 140 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சந்தைக்கு கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. அடுத்த வாரம் 3-வது சனிக்கிழமை என்பதால் கூடுதலாக பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன், மஞ்சுநாதேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.
உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்ததால் தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.