தேர்வு எழுதாத மாணவர் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியல்
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி சென்றவர் தேர்வு எழுதாமலேயே 5-வது செமஸ்டர் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.;
தேர்வே எழுதாதவர் தேர்ச்சி பெற்றார்
வேலூர்மாவட்டம், திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 79 உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சதீஷ் என்ற மாணவர் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்றார். இவர் மூன்றாவது செமஸ்டரிலேயே கடந்த 22-10-2021 அன்று கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
ஆனால் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தேர்வே எழுதாத இந்த மாணவர் 5-வது செமஸ்டரில் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியலை அக்கல்லூரிக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் போடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வேலூர் ஊரீசு கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில் முன்பாக போராட்டம் நடத்தினர்.
தொடர் குளறுபடி
இந்த நிலையில் கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று சென்ற சதீஷ் என்ற மாணவர் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை, தேர்வும் எழுதவில்லை. ஆனால் அவர் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வே எழுதாத மாணவருக்கு மதிப்பெண் பட்டியல் தயார் செய்தது பல்கலைக்கழகத்தின் உச்சகட்ட குளறுபடியை காட்டுகிறது. இது கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.