கலெக்டர் அலுவலகம் முன் மக்கள் சாலைமறியல்

Update: 2023-06-12 13:32 GMT


காவுத்தம்பாளையத்தில் துணைமின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சாலைமறியல்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா காவுத்தம்பாளையம் ஊராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள 16 கிராம மக்கள் நேற்றுகாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தங்கள் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 1 மாதமாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களை, நுழைவுவாசலில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் நுழைவுவாசல் முன் அமர்ந்து இருந்தனர். அதன்பிறகு பல்லடம் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குமரிக்கல்

மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் வந்து பேசி, கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்துச்சென்றார்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காவுத்தம்பாளையம் கிராமத்தில் குமரிக்கல்பாளையத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உயரமான நடுகல் உள்ளது. இந்த கல் குமரிக்கல் என்றழைக்கப்படுகிறது. இந்த கல் தரைக்கு மேல் 30 அடி உயரத்திலும், தரைக்கு கீழ் 15 அடி ஆழத்திலும் உள்ளது. நடுகல்லை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய இடங்களில் இந்த இடமும் ஒன்றாகும். கீழடியில் இந்த குமரிக்கல்லும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் காவுத்தம்பாளையம், குமரிக்கல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் 142 ஏக்கரில் துணைமின்நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுப்பு பணிகளை செய்து வருகிறது. குமரிக்கல்லுக்கு அருகிலேயே இந்த துணை மின்நிலையம் அமைய இருக்கிறது. மின்மாற்றிகளில் எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டால் இந்த குமரிக்கல் அழிய வாய்ப்புள்ளது. அதுபோல் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் போது இடி, மின்னல் தாக்குதலில் இந்த கல் சேதமாகும் வாய்ப்பு அதிகமாகும். எனவே துணை மின்நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றியமைக்க வேண்டும். குமரிக்கல் குறித்து தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் திருப்பூர் சப்-கலெக்டர், தொல்லியல்துறை அதிகாரிகள் நாளை (புதன்கிழமை) காவுத்தம்பாளையம் சென்று குமரிக்கல் பகுதியில் ஆய்வு நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று கலெக்டர் கூறினார். முடிவு கிடைக்கும் வரை காவுத்தம்பாளையம் பகுதியில் காத்திருப்பு போராட்டம் தொடர உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்