மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
கீழ்பாடியில் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்;
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தொடர்ந்து 8 நாட்கள் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், இரவில் உற்சவர் மாரியம்மன் சுவாமி வீதி உலா நடந்தது.
இந்நிலையில் விழாவின் 9-வது நாளான நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருள அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் அசைந்தாடியபடி முக்கிய தெருக்கள் வழியாக சென்று நிலைக்கு நின்றது. இதில் கீழ்பாடி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். அசம்பாவிதங்களை தடுக்க ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.