கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா;

Update: 2023-04-21 15:41 GMT

போடிப்பட்டி

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

புனித தீர்த்தம்

மடத்துக்குளத்தையடுத்த கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அந்தவகையில் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா கடந்த 18-ந் தேதி நோன்பு சாட்டப்பட்டு கம்பம் நடப்பட்டு தொடங்கியது. அமராவதி ஆற்றிலிருந்து திருக்கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டது. தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தும், பால் கொண்டு வந்தும் கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கம்பத்தில் ஊற்றப்படும் தீர்த்தத்தை புனித தீர்த்தமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்று அருந்துகின்றனர்.

பூவோடு

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவில் வளாகத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அபிஷேகம், சிறப்பு அலங்காரங்களுடன் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் கோவில் வளாகத்துக்கு முன் ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அக்கம்பக்கம் ஊர்களிலுள்ள உறவுகளை அழைத்து உற்சாகமாக திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

வரும் 29-ந் தேதி கோவில் சார்பாக வெண்கலப் பூவோடு எடுத்து திருக்கம்பத்தில் வைத்து வழிபாடு மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் வரும் 30-ந் தேதி மற்றும் மே மாதம் 1-ந் தேதிகளிலும் தொடர்ச்சியாக கோவில் சார்பில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மே 2-ந் மற்றும் 3 -ந் தேதிகளில் பக்தர்கள் அமராவதி ஆற்றிலிருந்து ஊர்வலமாக பூவோடு எடுத்து வந்து கோவிலை வலம் வந்து வழிபாடு செய்து மீண்டும் அமராவதி ஆற்றில் கலப்பார்கள். ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பது வழக்கமாகும். அதுபோல நடப்பு ஆண்டிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. பூவோடு எடுக்கும் சமயத்திலாவது தண்ணீர் திறக்கப்படுமா? என்று பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்