கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி
தஞ்சையில் இளைஞர் திருவிழாவையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி வருகிற 30-ந் தேதி நடக்கிறது.;
தஞ்சையில் இளைஞர் திருவிழாவையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
இளைஞர் திருவிழா
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் இளைஞர் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எச்.ஐ.வி., எய்ட்ஸ் பற்றிய விரிவான அறிவை மேம்படுத்திடவும், இளம்பருவ ஆரோக்கியம், மனஆரோக்கியம் மற்றும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டியும், கல்லூரி மாணவர்களுக்கு குறும்படம், நாடகம், மாரத்தான் போட்டிகள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற உள்ளது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி வருகிற 30-ந் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தொடங்கி தென்னகப்பண்பாட்டு மையம் வரை நடக்கிறது. 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் 17 வயது முதல் 25 வயதுடைய மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
முன்பதிவு
மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் பட்டியல் கல்லூரியின் சார்பாக dapcuthanjavur2023@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மாரத்தானில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று தனித்தனியாக வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ.1,000-ம் வழங்கப்படும். மேலும் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மாரத்தான் போட்டியில் திரளாக பங்கேற்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.