அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பலரும் தேடி வருவார்கள்

எடப்பாடி பழனிசாமி துணிச்சலான முடிவை எடுத்து வருவதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பலரும் தேடி வருவார்கள் என்று கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Update: 2023-10-26 18:45 GMT
கோவை


எடப்பாடி பழனிசாமி துணிச்சலான முடிவை எடுத்து வருவதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பலரும் தேடி வருவார்கள் என்று கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.


ஆலோசனை கூட்டம்


கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடந்தது. அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.


இதில் பூத் கமிட்டி பொறுப்பாளரான வக்கீல் அணி தலைவர் சேதுராமன் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறாடாவுமான எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


இளம் வாக்காளர்கள்


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே நாம் ஒவ்வொரு பூத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்து மக்களை சந்தித்து பணியாற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையை சேர்ந்த 25 பேரை ஒவ்வொரு பூத்துக்கும் நியமிக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்களை கண்டறிந்து நியமிக்க வேண்டும்.


தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2½ ஆண்டு ஆகியும் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யவில்லை. இதனால் அனைத்து மக்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கோபத்தில் உள்ளனர்.

ஆனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. அவர் தமிழக முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.


துணிச்சலான முடிவு


எனவே நாம் இந்த வாய்ப்பை சரியாக பயன்டுத்த வேண்டும். கட்சிக்குள் சில மனஸ்தாபங்கள் இருந்தால் அதை எல்லாம் விட்டு விட்டு அனைவரும் இணைந்து கட்சிக்கு விசுவாசமாக பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு பூத்துக்கும் 59 பேர் கொண்ட பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். அப்படி நியமித்து நாம் பணியாற்றும் போது மிக எளிதாக வெற்றி பெறலாம்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. கவர்னர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. தமிழக மக்கள் மீது முதல்-அமைச்சருக்கு அக்கறை இல்லை.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர். அவர் துணிச்சலான முடிவை எடுக்கக்கூடியவர்.


நம்மை தேடி வருவார்கள்


பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அவர் துணிச்சலு டன் அறிவித்தார்.

அதனால் தற்போது இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சரியான முடிவை எடுத்து உள்ளீர்கள் என்று பாராட்டி, ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.


எனவே நாம் கூட்டணிக்காக யாரையும் தேடி செல்ல வேண்டாம். நம்மிடம் கூட்டணி வைக்க பலரும் நம்மை தேடி வருவார்கள். எனவே நாம் மக்களை சந்தித்து கட்சி பணியாற்றி அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.


கூட்டத்தில் சூலூர் கந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி மற்றும் தோப்பு அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, வால்பாறை அமீது உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்