சமத்துவத்தின் அடையாளமாக மாஞ்சோலை திகழ்கிறது; வைகோ பேச்சு
சமத்துவத்தின் அடையாளமாக மாஞ்சோலை திகழ்கிறது என நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேசினார்.
பாளையங்கோட்டை நேருஜி அரங்கில் வக்கீல் அரசு அமல்ராஜ் எழுதிய "ஓர்மைகள் மறக்குமோ" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை விசாலி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் வைகோ பேசுகையில் கூறியதாவது:-
தமிழக மக்களின் நினைவுகள் அசைபோடும் வகையில் பல்வேறு பாடல்களை தந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய மகள், இந்த நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்திய விடுதலைக்கு முன்பு அடர்ந்த வனப் பகுதியாக திகழ்ந்த மாஞ்சோலை, மக்களின் கடுமையான உழைப்பால் சிறந்த தேயிலை கேந்திரமாக உருவெடுத்தது. தமிழும், மலையாளமும் பேசும் மக்கள் வாழ்ந்தாலும், சாதி, மத பேதமற்ற சமத்துவம் நிறைந்த ஊராக திகழ்ந்து வருகிறது. அவர்களது வாழ்வியலை பேசும் ''ஓர்மைகள் மறக்குமோ'' நூல் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன். மலைவாழ் மக்களின் மகிழ்ச்சி, சோலைக்குள் இருக்கும் சோக கீதங்கள் என அனைத்தையும் நூலில் பதிவிட்டு இருப்பது சிறப்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வக்கீல் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன், முன்னாள் எம்.பி முத்து கருப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ, காலச்சுவடு பதிப்பக ஆசிரியர் அரவிந்தன், ஓய்வு பெற்ற நீதிபதி மகிழேந்தி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி, ம.தி.மு.க துணை பொதுச் செயலர் தி.மு.ராஜேந்திரன், ம.தி.மு.க நெல்லை மாநகர மாவட்ட செயலர் கே.எம்.ஏ.நிஜாம், நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் மணிகண்டன், மூத்த வக்கீல் மங்களா ஜவகர்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நூல் ஆசிரியர் அரசு அமல்ராஜ் ஏற்புரையாற்றினார். மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.