பெரம்பலூரில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான்

பெரம்பலூரில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2023-07-05 18:30 GMT

மாரத்தான் போட்டி

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த "மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாரத்தான்" போட்டியை நேற்று நடத்தியது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு புறப்பட்ட ஆண்களுக்கான மாரத்தானை கலெக்டர் கற்பகமும், பெண்களுக்கான மாரத்தானை எம்.எல்.ஏ. பிரபாகரனும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முதல் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.

பரிசளிப்பு

மாரத்தான் பாலக்கரை, வெங்கடேசபுரம், ரோவர் ஆர்ச், சங்குபேட்டை, கடைவீதி, அரசு தலைமை மருத்துவமனை கல்யாண் நகர், அரணாரை விலக்கு வழியாக சென்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நிறைவடைந்தது. ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை அரியலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் பி.காம் 2-ம் ஆண்டு மாணவர் அரிதாசும், 2-ம் இடத்தை மதுரையை சேர்ந்த பட்டதாரி மாரிமுத்துவும், 3-ம் இடத்தை பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் மகேஸ்வரனும் பிடித்தனர். பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதி மாணவி தேவிபிரியாவும், 2-ம் இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவி அபிநயாவும், 3-ம் இடத்தை பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதி மாணவி தீபிகாவும் பிடித்தனர்.

இதையடுத்து, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும மைதானத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி கலந்து கொண்டு மாரத்தானில் முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு தலா 3 ஆயிரமும், 3-வது இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன. மாரத்தானில் 4-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.500-ம், சான்றிதழும் வழங்கப்பட்டன.

விளையாட்டு விடுதி மாணவிகள்

பெண்கள் பிரிவில் முதல் மற்றும் 3 முதல் 10 இடங்களை பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகள் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 427 மாரத்தானில் ஓடிய மாற்றுத்திறனாளி கலைச்செல்வனும், 14 மாரத்தானில் ஓடிய ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் 62 வயதான கிருபானந்தனும் இந்த மராத்தானில் ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மராத்தானில் ஓடிய அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மாரத்தானில் கலந்து கொண்டவர்களிடம் நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்பது குறித்தும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாற்று பொருட்களின் பயன்பாடு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பொதுமக்களுக்கும் ஒலிபெருக்கி வாயிலாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழியின் தீமைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நெகிழி இல்லா மாவட்டமாக பெரம்பலூரை மாற்றுவதற்கு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இதில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோட்டப்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பிரேம்குமார், அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்