திறந்தவெளி மதுபாராக மாறி வரும் மஞ்சக்குப்பம் மைதானம்

திறந்தவெளி மதுபாராக மஞ்சக்குப்பம் மைதானம் மாறி வருகிறது.

Update: 2023-08-13 18:45 GMT

கடலூர் மாநகரம் வரலாற்று தொன்மை வாய்ந்த துறைமுக நகரமாகும். இங்கு தென்பெண்ணை, கெடிலம் ஆகிய இரு ஆறுகள் சங்கமிப்பதால் இவ்வூரை கூடலூர் என்று அழைத்திருக்கின்றனர். இதனை கூடலூரை ஆளப்பிறந்த கோப்பெருஞ்சிங்கன் என்ற பண்டைய கால கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

காலப்போக்கில் கூடலூரானது கடலூராக மருவியிருக்கிறது. கடலூரை தமிழ்மன்னர்கள் மட்டுமின்றி பாமினி சுல்தான்கள், ஆற்காடு நவாபுகள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் ஆட்சி செய்து உள்ளனர் என்றாலும் கடலூரை கட்டமைத்ததில் பெரும்பங்காற்றியவர்கள் ஆங்கிலேயர்கள் என்பதை வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.

கடலூர் மாநகரின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளது. கடலூரின் முக்கிய பகுதியாக பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம், மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டரங்கம் ஆகியவை அமைந்துள்ளது. இதில், மஞ்சக்குப்பம் மைதானம் சுமார் 35 ஏக்கரில் அமைந்துள்ளது.

ஜெயலலிதாவிற்க்கு திருப்பம் தந்த மாநாடு

தமிழகத்தின் மிகப்பெரிய மைதானங்களில் இதுவும் ஒன்று. கடலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானத்தில் அவ்வப்போது கண்காட்சி, பொருட்காட்சி, அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் அறிமுகமானது இந்த மஞ்சக்குப்பம் மைதானத்தில்தான். தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகராக இருந்தபோது கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடந்த 19.6.1982 அன்று அ.தி.மு.க. மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாடு தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசியலில் திருப்பத்தை கொடுத்தது. இப்படிபட்ட மைதானத்தின் இன்றைய நிலையோ பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

மதுப்பிரியர்களின் கூடாரம்

தினமும் மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மைதானத்தில் காற்றோட்டமாக அமர்ந்து பேசி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது இந்த மைதானம் ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. குப்பை கொட்டும் இடமாக இந்த மைதானம் பயன்படுத்தப்படுதிறது. அதுமட்டுமின்றி வாகனம் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது. இரவில் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது.

மஞ்சக்குப்பம் மைதானத்தில் இரவு 7 மணி முதல் திருவிழா கூட்டம் போல் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் மதுப்பிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். பின்னர் அவர்கள், அங்கிருக்கும் உயர்கோபுர மின்விளக்கு வெளிச்சம் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து குதூகலமாக இரவு 11 மணி வரை மதுஅருந்தி விட்டு செல்கின்றனர்.

குப்பையாக மாறிய மைதானம்

சாலையில் பெண்கள், ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் மதுபிரியர்கள் மது அருந்துகிறார்கள். இதனால் சாலையில் செல்பவர்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். இதை போலீசாா் தனியாக சென்று தட்டிக்கேட்டாலும், அவா்களை மதுப்பிாியா்கள் கண்டுகொள்வதில்லை. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் கண்டும் காணாதது போல் செல்கின்றனர்.

மதுபிரியர்கள் குடித்துவிட்டு மது பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் மறுநாள் காலையில் பார்க்கும்போது மஞ்சக்குப்பம் மைதானமே மது பாட்டில்களால் நிறைந்து குப்பைமேடாக காணப்படுகிறது. இதனால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் குப்பைகளை சேகரிக்கவே துப்புரவு பணியாளர்கள் பெரும் பாடுபட வேண்டிய நிலை உள்ளது.

அபராதம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "தற்போது மது அருந்துவது சர்வசாதாரணமாகி விட்டது. பொதுஇடங்களில் குடித்து விட்டு மதுபாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் பொது இடங்களுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் பாட்டில்களை உடைத்தும் போட்டு விடுகிறார்கள். இதனால்அந்த வழியாக நடந்து செல்பவர்களின் காலில் குத்தி காயம் ஏற்படுகிறது. மேலும் கடலூரில் மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தை சுற்றிலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அண்ணா விளையாட்டு மைதானம், தாலுகா அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. பல்வேறு அதிகாரிகள் அந்த வழியாக கடந்து சென்றாலும் மது பிரியர்கள் அதனை கண்டு கொள்ளாமல் மது அருந்தி வருகின்றனர். மாநகரின் மையப் பகுதியில் நடக்கும் இந்த சம்பவத்தையே யாராலும் தட்டிக் கேட்க முடியவில்லை. எனவே மதுபான பார்களை தவிர திறந்த வெளியில் மது அருந்துவதற்கு தடை விதிப்பதோடு, அவ்வாறு மது அருந்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்"என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்