மணிமுத்தாறு- மாஞ்சோலை சாலையை சீரமைக்க வேண்டும்; உதவி கலெக்டரிடம் மனு
மணிமுத்தாறு- மாஞ்சோலை சாலையை சீரமைக்க வேண்டும் என உதவி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.;
சேரன்மாதேவி:
மணிமுத்தாறு பேரூராட்சி மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் ஸ்டாலின், விஜயகுமாரன், பாமா, ஜெயா ஆகியோர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப்பிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், ''மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி போன்றவற்றிக்கு செல்லக்கூடிய சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மணிமுத்தாறு-மாஞ்சோலை சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.
மேலும் 2028-ம் ஆண்டு தனியார் தேயிலை தோட்ட நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைகிறது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.