மாங்காய் சீசன் தொடக்கம்
சாணார்பட்டி பகுதியில் மாங்காய் சீசன் தொடங்கி உள்ளது. நோய் தாக்குதலால் வரத்து குறைய வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.;
மாங்காய் சாகுபடி
சாணார்பட்டி பகுதியில் கணவாய்பட்டி, வேம்பார்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, மணியகாரன்பட்டி, வலசு, பூவகிழவன்பட்டி, கணவாய்பட்டி, சாணார்பட்டி, தவசிமடை, அய்யாபட்டி, கம்பிளியம்பட்டி, எல்லப்பட்டி, கோம்பைபட்டி, மலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, தேத்தாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடந்து வருகிறது.
குறிப்பாக காசா, கல்லாமை, பங்கனபள்ளி, சப்பட்டை, செந்தூரம், காளாப்பாடி, மல்கோவா, கருங்குரங்கு, ரிமோனியா, நாடு, வாழைபூ என பல்வேறு ரக மாங்காய்கள் இங்கு விளைகின்றன.
வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி
அறுவடை செய்யப்படும் மாங்காய்களை கோபால்பட்டி, வேம்பார்பட்டி, அஞ்சுகுளிபட்டி, சாணார்பட்டியில் செயல்படுகிற 50-க்கும் மேற்பட்ட கமிஷன் கடைகளுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். அவை தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சாணார்பட்டி பகுதியில் இருந்து டெல்லி, குஜராத், மராட்டியம் ஆகிய வட மாநிலங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அதிகளவில் மாங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாத காலத்தில் மாங்காய் சீசன் தொடங்கும். அதன்படி தற்போது மாங்காய் சீசன் தொடங்கி உள்ளது. செந்தூரம், பங்கனபள்ளி ரக மாங்காய்கள் கமிஷன் கடைகளுக்கு விற்பனைக்காக வருகின்றன.
50 சதவீதம் வரத்து
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மாமரங்கள் பூ பூக்க தொடங்கிய ஜனவரி மாதத்தில் பலத்த மழை பெய்தது. இதேபோல் மாமரங்களில் புழுக்களால் நோய் தாக்குதல் அதிகரித்தது. இதனால் தொடக்கத்திலேயே காய்ப்புதிறன் குறைந்து போனது. மார்ச் மாதம் தொடக்கத்தில் கோடை மழை பெய்து இருந்தால் பிஞ்சுகள் உதிராமல் இருந்திருக்கும்.
ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தற்போது பிஞ்சுகள் டன் கணக்கில் மரத்தில் உதிர்ந்து வருகின்றன. இதனால் இந்த ஆண்டு வழக்கமான விளைச்சலில் இருந்து 50 சதவீதம் வரத்தை எதிர்பார்க்கிறோம். வடமாநில வியாபாரம் நன்றாக இருந்து, கூடுதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றனர்.