மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் - உதகையை சேர்ந்த நபரிடம் விசாரணை...!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2022-11-20 09:50 GMT

ஊட்டி,

கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதகையை சேர்ந்த நபரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியது அம்பலமாகியுள்ளது. மேலும் அந்த நபரை கோவை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்து நாசவேலைக்கு திட்டமிட்டு காயம் அடைந்தவர்கள் கோவை கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்