மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார்

மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.;

Update: 2022-12-08 21:13 GMT

மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மீட்பு துறை, மருத்துவத்துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, ஆசனூர், நம்பியூர் ஆகிய 11 தீயணைப்பு நிலையங்களில் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைத்திருக்க மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி உத்தரவிட்டார்.

மீட்பு உபகரணங்கள்

அதன் அடிப்படையில் ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் மீட்பு உபகரணங்கள் நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையில் நேற்று பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில், ரப்பர் படகு, எலக்ட்ரிக்கல் ரம்பம், லைப் ஜாக்கெட், கான்கிரீட் கட்டர், புகைப்போக்கி, அஸ்கா டவர் லைட் உள்ளிட்ட உபகரணங்கள் இருந்தன. இதேபோல், மீதமுள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் மீட்பு உபகரணங்கள் நேற்று தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறும்போது, மாண்டஸ் புயல் காரணமாக தீயணைப்பு துறையினர் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மீட்பு உபகரணங்களை காட்சிப்படுத்தி உள்ளோம். புயல் ஆபத்து நீங்கும் வரை தீயணைப்பு வீரர்களுக்கு அத்தியாவசிய தேவையின்றி விடுமுறை இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் குறித்து கண்காணிக்க அனைத்து தீயணைப்பு நிலையத்திலும் ஒருவரை நியமித்துள்ளோம். இவர், புயல் மற்றும் பிற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க அனைவருக்கும் தகவல் தெரிவிப்பார்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்