ஆவடியில் சுகாதார மையம் மற்றும் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய சுகாதாரத்துறை மந்திரி..!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சுகாதார மையம் மற்றும் ஆய்வகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.;
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மையம் மற்றும் ஆய்வகத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்த சுகாதார மையத்தின் கட்டிடப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் 22-ந்தேதிக்குள்ளாக முடிவடைந்துவிடும் என்று கூறினார். மேலும் நம்முடைய பிரதமர் சுகாதாரத்திற்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் தருகிறார். நாம் நாடு முழுவதும் சுகாதார சேவைகளை வலுப்படுத்த பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
அதன்பின்னர் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஏற்கெனவே தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 32 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் இல்லை. எதிர்காலத்தில் தமிழகம் மேலும் பல மருத்துவக் கல்லூரிகளைப் பெறுவதற்குத் தேவையான உதவிகளை அவர் நிச்சயமாக வழங்குவார் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.