நீண்ட நாட்களாக பணிக்கு வராத 2 போலீசாருக்கு கட்டாய ஓய்வு

Update: 2022-06-22 20:39 GMT

போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்

நாகா்கோவில்,

குமரியில் விடுப்பு எடுத்து நீண்ட நாட்களாக பணிக்கு திரும்பாத 2 போலீசாருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

2 போலீசாருக்கு கட்டாய ஓய்வு

தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசார் விடுமுறை எடுத்த பின்னர் நீண்ட நாட்கள் பணிக்கு திரும்பாமலும், தொடர்ந்து விடுமுறை எடுத்து பணிகளை சரிவர செய்யாமலும் இருந்தால் கட்டாய பணி ஓய்வு செய்யும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ஒரு போலீஸ் ஏட்டும், நாகர்கோவில் ஆயுதப்படையில் பணியாற்றிய தலைமை ஏட்டும் நீண்ட நாட்கள் பணிக்கு வராததால் கட்டாயப்பணி ஓய்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டார்.

பணி நீக்க நடவடிக்கை

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

காவல் துறையில் பணியாற்றி வரும் ஒவ்வொரும் தங்களது கடமைகளை சரியாக செய்ய வேண்டும். விடுப்பு எடுத்து கொண்டு பல மாதங்களாக பணிக்கு வராமல் இருப்பது, தொடர்ந்து விடுமுறை எடுத்து பணிகளை சரியாக மேற்கொள்ளாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதனடிப்படையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசாரின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தபோது, அதில் 2 போலீசார் விடுப்பு எடுத்து நீண்ட நாட்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தனர்.

இதுதொடர்பாக அவர்களுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 போலீசாருக்கும் கட்டாயப்பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்