மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் பலி

தேவகோட்டை அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்

Update: 2023-02-20 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தில் பாலாருடைய அய்யனார் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. மஞ்சுவிரட்டு விழாக்குழு தலைவர் துரைகருணாநிதி அம்பலம் வரவேற்றார். ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி தலைமை தாங்கினார். பாளையம்பட்டி ஜமீன்தார் அஸ்வின் என்ற பத்மராஜா முன்னிலை வகித்தார்.

முன்னதாக மேளதாளங்களுடன் கிராமத்தில் இருந்து புறப்பட்ட விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் அங்குள்ள அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் மஞ்சுவிரட்டு பொட்டலில், மாடுபிடி வீரர்களுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது. போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகளும், நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். கோவில் காளைக்கு மரியாதை செய்யப்பட்ட பின்னர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

30 பேர் காயம்

மாடுபிடி வீரர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் மட்டும் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டன. பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் அங்கிருந்து தப்பிச் சென்றன..

வேலாயுதப்பட்டினம் அருகே உள்ள மத்தினி கிராமத்தைச் சேர்ந்த வையாபாண்டி மகன் பிரகாஷ்(வயது 22) என்பவரை மாடு முட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் மாடு முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு அண்டா, சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்