10 மணி நேரம் தொடர்ந்து திருமுறையை முற்றோதும் திருப்பூர் மாணவி

Update: 2022-12-24 16:28 GMT

நவீன யுகத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆன்ட்ராய்டு செல்போன் ஆக்கிரமித்துள்ளது. பள்ளிக்கு செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் சிறுவர்கள் செல்போனில் மூழ்கி விடுகிறார்கள். இளைஞர்களும் குடும்ப உறுப்பினர்களுடன் பேச முடியாத அளவுக்கு செல்போனில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

பாரம்பரிய கலைகளை கற்றுக்கொள்வது, புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்துவது, மைதானத்தில் விளையாடுவது என்பது குறைந்து கொண்டே வருகிறது. நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு மத்தியில் முதிர்ந்தவர்கள் செய்யும் திருமுறையை முழுமையாக முற்றோதும் பணியை செய்து வருகிறார் திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி. அதுமட்டுமில்லாமல் பரதநாட்டியம், வீணை பயிற்சி, கர்நாடக சங்கீதம் கற்றல் பணியையும் மேற்கொண்டு சகலகலா வல்லவியாக இருக்கும் மாணவி திருப்பூர் அங்கேரிப்பாளையம் இந்திராநகரை சேர்ந்த தேவதர்ஷினி (வயது 16).

பரதநாட்டியம், வீணை பயிற்சி

இவருடைய தந்தை சண்முகம் (வயது 47) பனியன் வியாபாரம் செய்து வருகிறார். தாயார் சாமளா (37) பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு தன்வந்த் (11) என்ற தம்பியும் உள்ளார். பெற்றோருடன் கோவில்களுக்குச் செல்லும்போது, அங்கு சாமி பாடல்களை ராகத்துடன் பாடும் திறமையை சிறுவயது முதலே தேவதர்ஷினி பெற்று இருந்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறுமியின் குரல் வளத்தை பாராட்டி செல்ல, பெற்றோருக்கு தனது மகளுக்கு பாட்டு கற்றுக்கொடுக்கும் ஆசையை தூண்டியது. அதன்படியே கர்நாடக சங்கீதத்தை கடந்த 8 ஆண்டுகளாக கற்று வருகிறார். அத்துடன் நின்றுவிடாமல் 6 வருடமாக வீணை பயிற்சியும், 11 வருடமாக பரத நாட்டியத்தையும் கற்று வருகிறார் சிறுமி தேவதர்ஷினி.

இத்தனை பயிற்சிகளையும் மேற்கொள்ளும் தேவதர்ஷினி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, வீட்டில் இருந்து தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் மூலமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார். காரணம் பரதநாட்டியம், வீணை பயிற்சி, கர்நாடக சங்கீதம் கற்பதற்கு நேரம் போதுமானதாக இல்லை என்பதே ஆகும். பள்ளிக்கு சென்றால் இவைகளுக்கான நேர ஒதுக்கீடு செய்வதில் சிரமம் நிலவும் என்பதை கருத்தில் கொண்டு சிறுமியின் பெற்றோர் இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

சாதனை முயற்சி

தேவதர்ஷினி இத்துடன் நின்றுவிடாமல் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் பணியையும் சத்தமில்லாமல் மேற்கொண்டு இருக்கிறார். திருமுறை பாடல்கள் மொத்தம் 18 ஆயிரத்து 326 ஆகும். 76 புத்தகங்களாக உள்ளன. அத்தனை பாடல்களையும் ராகம் மற்றும் பண்ணோடு தினமும் 10 மணி நேரம் தொடர்ச்சியாக படிக்கும் சாதனையை மேற்கொண்டுள்ளார்.

திருப்பூர் பாண்டியன் நகர் சஞ்சீவி நகரில் உள்ள ஸ்ரீராஜகருப்பராயன் கோவிலில் சிவன் சன்னதிக்கு முன்பு அமர்ந்து கடந்த 15-ந் தேதி முதல் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறார் தேவதர்ஷினி. காலை 8 மணிக்கு திருமுறை பாடல்களை படிக்க தொடங்கினால் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக படிக்கிறார். 10 நாட்களாக தொடர்ச்சியாக சாதனை நிகழ்த்தி வரும் சிறுமி, நோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெறும் நோக்கத்தில் இந்த முயற்சியை செய்கிறார். தொடர்ந்து 10 மணி நேரம் திருமுறை முற்றோதுதலை வீடியோவில் நேரடியாக பதிவு செய்கிறார்கள். இதை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தக அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள்.

திருமுறை முற்றோதுதல்

இது குறித்து சிறுமி தேவதர்ஷினி கூறும்போது, '2½ ஆண்டுகளுக்கு முன்பு கோவை மதுக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி பாடல்களை பாடும்போது அங்கிருந்த சாமிகள், திருவாசம் படிக்குமாறு தெரிவித்தார். ராகத்துடன் பாடுவதற்காக எனது பெற்றோர், கோவையை சேர்ந்த ஒதுவார் கமலகண்ணனிடம் கடந்த 2020-ம் ஆண்டு பயிற்சிக்கு சேர்த்தனர். அவருடைய வழிகாட்டுதலின்படி திருமுறை பாடல்களை முழுமையாக ராகத்துடன், பண்ணுடன் பாடுவதுடன் விளக்கத்தையும் கற்றறிந்தேன். இதை சாதனையாக நிகழ்த்தலாம் என்று எனது பெற்றோர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நான் ஏற்கனவே தொடர்ந்து 8 மணி நேரம் திருவாசகம் முற்றோதுதல் பணியை மேற்கொண்டுள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் 3 மணி நேரம் 11 நிமிடங்கள் தொடர்ந்து முற்றோதுதல் செய்து இந்தியன் புக்ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளேன்.

அதன்பிறகு திருமுறை முழுமையையும் விளக்கத்துடன் பாடுவதற்கு வீட்டில் வைத்து 20 நாட்கள் சோதனை பயிற்சி செய்தேன். உலக நன்மை வேண்டியும், திருமுறை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறவும் கோவிலில் வைத்து திருமுறை முற்றோதுதல் செய்து சாதனை புரியலாம் என நினைத்து ராஜகருப்பராயன் அறக்கட்டளையினர் உதவியோடு இந்த சாதனை நிகழ்ச்சியை மேற்கொண்டு இருக்கிறேன்.

19 நாட்களில்...

தினமும் 10 மணி நேரம் தொடர்ச்சியாக திருமுறை முற்றோதுதல் செய்கிறேன். தண்ணீர், பால், பழச்சாறு மட்டும் குடிப்பேன். 10 மணி நேரத்துக்கு பிறகே உணவு உட்கொள்வேன். 20 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் 19 நாட்களில் இந்த சாதனையை முடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்