சாம்சங் தொழிலாளர்களின் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் ஒப்புதல்: தா.மோ.அன்பரசன் பேட்டி

சாம்சங் தொழிலாளர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-10-07 17:12 GMT

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

போராடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நேற்றும் இன்றும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போராட்டக்குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் உடன்பாட்டுக்கு வந்து கையெழுத்திட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே அரசின் கோரிக்கை. சாங்சங் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. அதனை இங்கு விவாதிக்க முடியாது.

போராட்டக்குழுவினரின் 14 கோரிக்கையை நிறைவேற்றுவதாக சாம்சங் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அரசின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்