தேசிய பஞ்சாலைகளை உடனே மத்திய அரசு இயக்க வேண்டும்

Update: 2022-07-26 16:50 GMT


கொரோனா காலத்தில் மூடப்பட்ட, தேசிய பஞ்சாலைகளை உடனடியாக மத்திய அரசு இயக்க வேண்டும் என்று பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில மாநாடு

தமிழ்மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யு.) மாநில மாநாடு நேற்று திருப்பூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிர்வாகி சுப்பிரமணியம் மாநாட்டு கொடியை ஏற்றினார். வரவேற்புக்குழு தலைவர் மூர்த்தி வரவேற்றார். மாநாட்டை சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் தொடங்கி வைத்து பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பஞ்சாலைகளில் பயிற்சியாளர்களின் குறைந்தபட்ச தினசரி கூலியை ரூ.493 என அரசு அமல்படுத்த வேண்டும். மற்ற தொழிலாளர்களுக்கு ரூ.493-க்கு மேல் குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்க வேண்டும். இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலாக்க வேண்டும். ஏப்ரல் மாதம் பேசி முடிவு செய்யப்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகளின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஆகி அமலாக்கப்படாமல் உள்ளது. அமைச்சர் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

தேசிய பஞ்சாலைகளை இயக்க வேண்டும்

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் தேசிய பஞ்சாலைகள் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தேசிய பஞ்சாலைகளை இயக்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சங்கத்தின் மாநில தலைவராக சந்திரன், பொதுச்செயலாளராக அசோகன், பொருளாளராக சக்திவேல் உள்பட 13 துணை நிர்வாகிகள், 32 மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்