மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த நண்பரை காப்பாற்ற முயன்றவர் ரெயிலில் அடிபட்டு சாவு

சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்த நண்பரை காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி ஓடியவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.;

Update:2023-04-27 11:22 IST

சிங்கப்பூர் செல்ல

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 22). இவரது நண்பர் சுனில் என்பவரை சிங்கப்பூருக்கு வழி அனுப்பி வைப்பதற்காக, மற்றொரு நண்பர் அதேப் பகுதியைச்சேர்ந்த ஆசைத்தம்பி (வயது 24) உட்பட 4 பேர் காரில் குரோம்பேட்டைக்கு கடந்த 24-ந்தேதி மாலை வந்தனர்.

சிங்கப்பூர் செல்லும் விமானத்திற்கு செல்ல அதிக நேரம் இருப்பதாக கூறி, நண்பர்கள் அனைவரும் மெரினா கடற்கரைக்கு சென்றுவர முடிவு செய்தனர். பின்னர், 4 பேரும் மின்சார ரெயிலில் ஏறி மெரினா கடற்கரைக்கு சென்று பொழுதை போக்கினர். பின்னர், திருவல்லிக்கேணியில் மின்சார ரெயிலில் ஏறி, பூங்கா ரெயில் நிலையம் வந்தனர். அங்கிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலில் 4 பேரும் ஏறினர்.

கீழே விழுந்தார்

ரெயில் மாம்பலம் நிலையத்தை கடந்து சைதாப்பேட்டை ரெயில்நிலையம் அருகே வந்தபோது, படிக்கட்டு அருகே நின்றிருந்த ஆசைத்தம்பி திடீரென தவறி கிழே விழுந்தார். இதனால், பதறிப்போன நண்பர்களில் 2 பேர் சைதாப்பேட்டை நிலைய மேலாளருக்கு தகவல் கொடுக்க விரைந்தனர். மற்றொரு நண்பர் கவுதம், நண்பரை காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி பின்நோக்கி ஓடினர். அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில், கவுதம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். பின்னர், மருத்துவ ஊழியர்கள் விரைந்து வந்து, அவரை பரிசோதித்தனர். அப்போது, கவுதம் உயிரிழந்தது தெரியவந்தது.

விசாரணை

இதையடுத்து, ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்த ஆசைத்தம்பி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல, ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் உள்ள உடற்கூறாய்வு கூடத்தில் வைக்கப்பட்ட கவுதமின் உடல் பிரேத பரிசோதனைக்குபிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்