மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டுகள் சிறை

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;

Update: 2022-12-12 19:55 GMT

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பள்ளி மாணவி மாயம்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியை அவரது பெற்றோர் தனது உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்ததுடன், திருமண வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்யலாம் என பேசி வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி தனது தாய் மற்றும் அக்காவுடன் வீட்டில் தூங்கச்சென்ற பிளஸ்-2 மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் தாயார், சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

மீட்பு

அதன்படி மாணவியை காணவில்லை என போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் திருவலஞ்சுழி பஸ் நிறுத்தத்தில் வாலிபர் ஒருவருடன் காணாமல் போன மாணவி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர்.

பாலியல் பலாத்காரம்

விசாரணையில் பள்ளி மாணவியுடன் நின்றவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோட்டைச்சேரி சாலபோகம் பகுதியை சேர்ந்த குருசாமி மகன் பிரகாஷ்(25) என்பதும், இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் இவர் தனது அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டதும் இதையடுத்து அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

20 ஆண்டுகள் சிறை

இதைத்தொடர்ந்து காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை மாறுதல் செய்து பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சுவாமிமலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து பிரகாசிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்