போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.;
செம்பட்டு:
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு திருநல்லூர் ஆண்டிவீதியை சேர்ந்த உலகநாதனின் மகன் கஜேந்திரன் (வயது 42). இவர் திருச்சியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வளைகுடா நாடான ரியாத்திற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மதியம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.அப்போது, இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது, கும்பகோணம் பேட்டை நாணயக்கார தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுரேஷ்பிரபு (43) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டில் அவர் வெளிநாடு செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி விமான நிலைய குடிவரவுத்துறை உதவி அதிகாரி மெய்யப்பன், திருச்சி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் கஜேந்திரன் மீது ஏமாற்றுவதற்காக போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணத்தை உண்மையானதாக பயன்படுத்துதல், போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர், கஜேந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.