சுற்றுலா பயணிகளிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது; 64 பவுன் மீட்பு
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 64 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவிகளில் தண்ணீர் கொட்டிய நேரத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண் சுற்றுலா பயணிகளிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு போனதாக குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் கடந்த மாதம் 15-ந் தேதி ஒரே நாளில் 7 பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டுப் போனது. இதுகுறித்து போலீசார் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருப்பத்தூரை சேர்ந்த ராஜசேகர் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரின் தூண்டுதலின் பேரில் சில பெண்கள் அருவியில் குளித்த பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை பறித்தது தெரியவந்தது. போலீசார் ராஜசேகரிடம் இருந்து 64 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட குற்றாலம் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பாராட்டினார். இந்த நகைகளை சூப்பிரண்டு சாம்சன், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாக சங்கர், குற்றாலம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.