இரும்பு கம்பி வேலி ரோல்களை திருடியவர் கைது
இரும்பு கம்பி வேலி ரோல்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட இடையத்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 38). இவர் அதே கிராமத்தில் பொய்யூரிலிருந்து சுண்டக்குடி செல்லும் சாலையில் செட் அமைத்து சிமெண்டு மற்றும் இரும்பு கம்பி வேலிகளை விற்பனை செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவரது கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான இரும்பு கம்பி வேலி ரோல்கள் திருட்டு போனது. இது குறித்து கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் இரும்பு கம்பி வேலி ரோல்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கம்பி வேலி ரோல்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ரமேஷை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.