மின்சார ரெயிலில் 37¾ பவுன் நகைகளை திருடியவர் கைது

தாம்பரம்-எழும்பூர் வந்த மின்சார ரெயிலில் 37¾ பவுன் நகைகளை திருடியவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-16 07:41 GMT

சென்னை,

மயிலாடுதுறையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 54). இவர் டெல்லி மேற்கு சாகர்பூரில் பணி செய்து வருகிறார். வெங்கடேசன் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்வதற்காக கடந்த 13-ந்தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து எழும்பூருக்கு மின்சார ரெயிலில் பயணம் செய்தார். எழும்பூர் ரெயில் நிலையம் வந்தவுடன் தான் கொண்டுவந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து, எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், தான் கொண்டுவந்த பையில் 37¾ பவுன் தங்க நகைகளும், ஒரு செல்போன் மற்றும் அடையாள அட்டை இருந்ததாக தெரிவித்தார். அதன்பேரில் எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கொள்ளையனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் எழும்பூர், கடற்கரை, மயிலாப்பூர், பூங்கா, பார்க்டவுன் முதல் தாம்பரம் வரை உள்ள ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், நேற்று மின்சார ரெயிலில் தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது மின்சார ரெயில்களில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிவதை கண்டனர். இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான வகையில் பதில் அளித்தார். இதனால், சந்தேகம் அடைந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில், தாம்பரம் சத்ய சாய் நகரை சேர்ந்த பாபு (46) என்பதும், வெங்கடேசன் கொண்டுவந்த நகை பையை திருடியதும் தெரியவந்தது. பின்னர், அவரிடமிருந்து 37¾ பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டு அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்