பூந்தமல்லி சிறை மீது 'டிரோன்' பறக்கவிட்டவர் கைது

பூந்தமல்லி தனி சிறை, சிறப்பு கோர்ட்டு மீது ‘டிரோன்’ பறக்க வி்ட்டவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-02-15 21:49 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில், தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டு மற்றும் தனி கிளை சிறை உள்ளது. என்.ஐ.ஏ. வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களும், இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர்களும் இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன், டெல்லியில் உள்ள சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது சிறப்பு கோர்ட்டு மற்றும் தனி கிளை சிறை மீது சிறிது நேரம் 'டிரோன்' கேமரா பறந்து கொண்டு இருந்தது.

கைது

இதனை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த 'டிரோனை' துப்பாக்கியால் சுட முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த 'டிரோன்' அங்கிருந்து பறந்து சென்று விட்டது. போலீசார் அதை பின்தொடர்ந்து சென்றபோது, அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அந்த 'டிரோன்' இறங்கியது.

போலீசார் அங்கு சென்று 'டிரோனை' இயக்கியவரை கைது செய்தனர். 'டிரோனும்' பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவரிடம் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் 'டிரோனை' பறக்க விட்டவர் விஜய்பாலாஜி (வயது 37) என்பதும், தனி கிளை சிறை அருகே இருந்த திருமண மண்டபத்தில் நடந்த திருமணம் நிகழ்ச்சிக்காக வீடியோ பதிவு செய்ய 'டிரோன்' கேமரா பறக்கவிட்டதும் தெரியவந்தது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத் தினர். கோர்ட்டு மற்றும் தனி கிளை சிறை இருப்பது தெரியாமல் திருமண நிகழ்ச்சியில் வீடியோ எடுக்கவே 'டிரோன்' பறக்க விட்டதாக அவர் கூறியதால் கோர்ட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்