போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.54 லட்சம் நிலம் மோசடி ஒருவர் கைது

சென்னையை சேர்ந்த முதியவரிடம் போலி ஆவணம் தயாரித்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-20 21:45 GMT

ஆவடி,

சென்னை அயனாவரம் பாளையக்கார தெருவை சேர்ந்தவர் இந்திரமோகன் (வயது 72). இவர், ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நிலம் வாங்க விரும்பினார்.

இதையறிந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் வேல்முருகன், சுகுமாரன், சுரேஷ், பிளீந்திரன் ஆகியோர் இந்திரமோகனிடம் தொடர்பு கொண்டனர்.

பின்னர் அவர்கள் அம்பத்தூர் அடுத்த பாடி பாண்டுரங்கபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் (53) என்பவரை இந்திரமோகனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

போலி ஆவணம் தயாரித்து...

கோபிநாதன், இந்திரமோகனை வேப்பம்பட்டு கணேஷ் நகரில் 1,800 சதுர அடி கொண்ட 2 வீட்டு மனைகளை காண்பித்து இது தனது நெருங்கிய நண்பர்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து ரூ.54 லட்சம் பணத்தை இந்திரமோகனிடம் வாங்கி கொண்டு திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரையம் செய்து கொடுத்தார்.

இதையடுத்து இந்திரமோகன் அந்த இடத்தில் சென்று வீடு கட்ட ஆரம்பித்தபோது அந்த 2 மனைகளின் உரிமையாளர்கள் வந்து இது தன்னுடைய இடம் என்று கூறி வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரமோகன், கோபிநாத்திடம் இதுகுறித்து கேட்டார். பின்னர் ஒரு வீட்டு மனையை அதன் உரிமையாளரிடம் பேசி இந்திரமோகனுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். ஆனால் மற்றொரு வீட்டுமனை உரிமையாளரை அழைத்து அவர் கிரையம் செய்து கொடுக்காமல் கோபிநாதன் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

கைது

இதனால் விரக்தியடைந்த இந்திரமோகன், இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் கோபிநாதன் 2 வீட்டு மனைகளின் உரிமையாளர்களின் பெயர்களை போலியான நபர்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபிநாதனை கைது செய்து நேற்று பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்